This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/19 at 07:10
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சமூகம்

இலங்கை 21.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். இவர்களுள் 5 மில்லியன் மக்கள் மேல்மாகாணத்தில் வசிக்கின்றார்கள். 65,610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இலங்கை, ஒன்பது மாகாணங்களாகவும் 25 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மக்கள் தொகையானது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலாயர், மற்றும் இலங்கை செட்டி ஆகிய இனத்தவரால் உள்ளடக்கப்பட்டது. 

எண்ணிக்கை அடிப்படையில் சிங்களவர் பெரும்பான்மையினராக இருப்பதினால் சிங்கள மொழி அதிகளவில் பேசப்படும் மொழியாக இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது 20 மில்லியன் மக்கள் தொகையில் 15 மில்லியன் மக்கள்  சிங்கள மொழி பேசும் மக்கள் எனப்பதிவாகியுள்ளது.  அண்ணளவாக 2.2 மில்லியன் மக்கள் தொகையை தமிழ் மக்கள் உள்ளடக்குவதால் தமிழ் மொழி இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாக அமைகின்றது. இம்மொழிகளுக்கான உரிமைகள் பற்றி இலங்கை அரசியலமைப்பின் அதிகாரம் IV தெரிவிக்கின்ற அதேவேளை, ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையில் காணப்படும் சில ஊடக நிறுவனங்கள் பலதரப்பட்ட நேயர்கள் மற்றும் வாசகர்களுக்கு ஏற்றவகையில் நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைகளைத் தயாரிக்கின்றன.    உதாரணமாக Wijeya Newspapers Limited, Associated Newspapers of Ceylon Limited, The Capital Maharaja Organisation Limited மற்றும் Asia Broadcasting Corporation (Private) Limited ஆகிய நிறுவனங்கள் மூன்று மொழிகளிலும் உள்ளடக்கங்களைத்  தயாரித்து வழங்குகின்றன.

கடந்த நூற்றாண்டு முழுவதும், மொழியானது அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகக் காணப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் அரசாங்கமானது 1956 ஆம் ஆண்டின் அரசகரும மொழிகள் சட்டத்தின் 133 ஆம் இலக்கத்தை இயற்றியதன் மூலம் சிங்கள மொழி மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வமான மொழியாக செயல்படுத்தப்பட்டது. மொழியானது இனத்துடன் தொடர்புபட்டதன் காரணமாக, சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டமை இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அது இலங்கையின் 30 வருட ஆயுதப் போருக்கும் காரணமாக அமைந்தது. இவ்வாறு இன-மொழி சார் சமூகங்களுக்கிடையிலேற்பட்ட இப்பிளவின் பிரதிபலிப்பானது  இன்றைய காலத்தில் வெளிவரும் தமிழ் மற்றும் சிங்களப்பத்திரிகைகள் அரசியல் உணர்திறன்மிக்க செய்திகளைத் தெரிவிக்கும் முறையில் பிரதிபலிக்கின்றது.

அண்மைக்காலமாக மதமும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. பெரும்பான்மை சிங்களவர்களால் பின்பற்றப்படும் பௌத்த மதமானது இலங்கையின் முதன்மையான மதமாக உள்ளது.   2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 15 மில்லியன் பௌத்தர்களும், 1.6 மில்லியன் கிறிஸ்தவர்களும், 2.3 முஸ்லிம்களும், 3 மில்லியன் இந்துக்களும் வசிப்பார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியின்போது பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை இலக்குவைத்த இன-மத சார் வன்முறையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது.

இலங்கையர் மற்றும் இலங்கையை பூர்வீகமாக உடையவர்களை உள்ளடக்கிய பாரிய சமூகங்களாக பிறநாடுகளில் வசித்து வருகின்றனர். ஆயுதப்போராட்டம் இந்த இடப்பெயர்வுக்கான ஒரு முக்கிய காரணியாக இருந்தபோதும், மேலும் பலர் பொருளாதார காரணங்களுக்காகவும் பிறநாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். இந்தியா, இங்கிலாந்து, நோர்வே, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களை உள்ளடக்கிய வெளிநாட்டு சமூகம்,  உள்ளூர் செய்தி வெளியீடுகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை தவறாமல் உள்வாங்குகின்றனர். இலங்கையிலிருந்து வெளியேறும் தொழிலாளர் இடப்பெயர்வு தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கியதாகக் காணப்படுகின்றது. இங்கு வானொலி நிலையங்கள்  போன்ற  உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக தயாரிப்புக்கள் இணையத்தினூடாக கேட்கப்படுகின்றன. 

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ